முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு

பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் !  அத்தகைய பெயர் பெற்றவர்  கவியரசர் கண்ணதாசன்!  அவரது அசரவைக்கும் வரிகளைப்  படித்து அதன் எளிமையில் ஆழ்ந்து போன நாட்கள் கணக்கிலடங்கா ! சில பாடல்களைப் படிக்கும்போது அழகான ஒன்றிரண்டு பழஞ்சொல்லோ, பாடல் வரியோ,  கவிதை நயமோ, காப்பியநயமோ நமது நினைவுக்கு வராமல் போகாது! அது கவிஞர்களுக்கே உரித்தான பெருமை! சலுகையும் கூட ! ஆனால் அந்த வரிகளை எந்த அளவுக்கு மேலும் மெருகும், அழகும், எளிமையும், ஏற்றமும் கூட்டிப் படைக்க  அவனால் இயல்கிறது என்பதே கவியின் சிறப்பு!  அந்த வகையில் கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்கள் சில, எந்தெந்தப் பழைய வரிகளை நினைவூட்டுகிறது, அந்தப் பழைய பெட்டகத்துக்கு மேலும் எந்த அளவுக்கு அவர் எளிமையும் ஏற்றமும் அளித்து நமக்குத் தருகிறார் என்பதை அலசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். அல்லாது, கவியரசர் திறமையை எந்த வகையிலும் எள்ளுவதோ குறைப்படுத்துவதோ கிடையாது  எமது எண்ணம்!  நேயர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்தத் தொடரை நேயர்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம்!

1.  "நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ" 


படம்: வாழ்க்கைப் படகு
பாடகர்: பி.பி.ஸ்ரீநிவாஸ்

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே                (நேற்று)

உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே 
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே 
நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்       (நேற்று)

பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
பாவையுன்  முகத்தைக்  கண்டேன்  தாமரை  மலரைக்  கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
கோவைபோல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே  கனவோ  என்று  வாடினேன்  தனியே நின்று 
வண்டு  போல்  வந்தாய்  இன்று  மயங்கினேன்  உன்னைக்  கண்டு
                                                                                                        (நேற்று)

நேற்றுவரை  நீ  யாரோ  நான்  யாரோ
இன்று  முதல்  நீ  வேறோ  நான்  வேறோ
காணும்  வரை  நீ  எங்கே  நான்  எங்கே
கண்டவுடன்  நீ  இங்கே  நான்  அங்கே   

இந்த அருமையான வரிகளைப் படித்தால் மயங்காதவர் யாருளரோ? காதலன், தனக்கும் தன் காதலிக்கும் உண்டான உறவையும் நட்பையும் குறித்து மனம் வியந்து போற்றுகிறான் ! அன்பு கலந்த நெஞ்சங்களின் பிணைப்பைக் கண்டு வியக்கிறான் ! 'நாம் ஒருவரை ஒருவர் கண்டவுடன் நீ என்னுள்ளும் நான் உன்னுள்ளும் ஆகிவிட்டோம்' என்கிறான்! இந்த அழகான வரிகளைப் படிக்கும்போது, ஒரு ஒப்புமைக்குக் 'குறுந்தொகை' கை கொடுக்கிறது.

"யாயும்  ஞாயும்  யார்  ஆகியரோ
எந்தையும்  நுந்தையும்  எம்முறைக் கேளிர்
யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்
செம்புலப்  பெயல்நீர்  போல
அன்புடை  நெஞ்சம் தாம்கலந் தனவே!"

இதன் பொருள் :
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே !

இதே கருத்தைத்தான் கவியரசர் மிக எளிமையாகக் கையாண்டிருக்கிறார் ! 'செம்மண்ணில் நீர்கலந்தாற்போல்' என்ற உவமையை, 'கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே' என்று அவர்தம்  உள்ளம் கலந்து விட்டதைக் குறிப்பிட்டு விட்டார். 

அடுத்தாற்போல், கீழ்க்கண்ட வரிகளைப் பாருங்கள் !

"உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை    நீ  பார்க்கின்றாயே
 விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ   பார்க்கின்றாயே"

திருக்குறள் காமத்துப்பாலில் 'குறிப்பறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள குறளை மேலும் எளிமைப்படுத்திக் கவியரசர் கூறியுள்ளது விளங்கும்.

குறள் :
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

இதற்கு மு.வரதராசனார் அவர்களின்  உரை :

'யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கிமெல்லத் தனக்குள் மகிழ்வாள்'

'நோக்காக்கால்' என்ற சொல்லை நகர்த்தி, எதுகை மோனை பிறழாமலிருக்க, 'விண்ணை நான் பார்க்கும்போது' என்று பாங்குறச் சொல்லியிருக்கிறார் ! அனைத்தையும் விட, இந்தக் கருத்தை மேலும் செம்மைப்படுத்தி அடுத்த இரண்டு வரிகளைக் கொடுத்துள்ள அழகே அழகு ! 
"நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்
புன்னகை  புரிந்தாலென்ன  பூமுகம்  சிவந்தா  போகும்!"

அவள்மேல் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டும் விதத்தில் 'நேரிலே பார்த்துவிட்டால் நிலவு தேய்ந்து போகுமா, பூமுகம் சிவந்து போகுமா' என்றும் கேட்டு விடுகிறான் !

இறுதி நான்கு வரிகள் பேரழகு. மென்மேலும் கவிதையைச் செம்மைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. '

'உன் முகத்தையும் பார்த்தேன் தாமரை மலரையும் பார்த்தேன் கொவ்வையிதழையும் பார்த்தேன் குங்குமச் சிமிழையும் பார்த்தேன்' என்கிறான். 'உன்முன்னால் அவற்றின் சிறப்புக்கு மதிப்பில்லை' என்னும் விதத்தில். 'ஒருவேளை நான் கண்டது கனவோ என்று திகைத்து நிற்குங்காலை மலரைச் சுற்றும் வண்டைப்போல் நீ என்னைச் சுற்றி வந்து நின்றாய்'  என்று சொல்லி மகிழ்கிறான் !

இத்தனை அழகான ஒரு காதலை இவ்வளவு நேர்த்தியாக வேறு எந்தக் கவிஞனால் எழுதிவிட முடியும் ?

--கி.பாலாஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 1

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய தலைப்பின் கீழான விவாதத்தின் தொகுப்பு உங்களுக்காக இங்கே:

தமிழ் கூறும் நல்லுலகம் திருவள்ளுவராண்டு 2048 மாசி மாதம் இருபத்தியோராம் நாள் விவாதத்திற்காக வழங்கப்படும் தலைப்பு : தமிழ் மொழி - இன்றும் - நாளையும்!
சிகரம் பாரதி : தமிழ்மொழியின் பழம்பெரும் பெருமைகள் பற்றி இன்று பேச வேண்டாம். தமிழ்மொழி இன்று எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்காக எதிர்காலத்தில் நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால மென்பொருள் ஆளப்போகும் உலகில் தமிழின் வளர்ச்சிக்கு நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்வோம்.


பாலாஜி : 'உலகவழக்கழிந்தொழிந்து சிதையாத' தமிழின் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து எத்தனைதான் நாம் போற்றி நின்றாலும்,  நமதருமைத் தமிழின் இன்றைய நிலைமையைத் தமிழராகிய நாமன்றி வேறு யார் சிந்திக்க இயலும்?  தமிழின் நிலையும் தரமும…

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 2

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் இரண்டாம் பகுதி உங்களுக்காக இங்கே: முதலாம் பகுதி: தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 1
இரண்டாம் பகுதி:
ஜெகஜோதி : குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டிய நிலையில் தமிழ் இல்லை. உலக அரங்குக்கு அதை எடுத்து செல்வது நம் பணி, நமது அரசின் பணி. தூய தமிழ் மற்றும் எளிய தமிழ் வேண்டும் . ஆனால் பிறமொழி கலந்துதான் தமிழ் மொழி நிலை நிறுத்தப் பட வேண்டுமா?.  உலக மொழிகளுக்கெல்லாம் தாய் எம் மொழி .
பாலகுமரன் : பிறமொழி கலந்து என்று பொதுவாகக் கருதாமல் ஆண்டாண்டு காலமாக எம் தமிழ் மக்களின் நாவில், வாழ்வில் உணர்வில் கலந்து விட்ட சொற்களைப் பாருங்கள்... எம் தமிழர் பேசி பழகிவிட்ட  சொற்களை ஏன் ஏற்றுக் கொள்ளத் தயக்கம்? எம் தமிழர் புரிந்து கொள்ள முடியாத சொல்லை பேசுவானேன் ? மொழியே நம் கருத்தைத் தெளிவாகக் கூறத்தானே... காப…

SIGARAM.CO - சிகரம் இணையத்தளம் உருவாகிறது!

நலம், நலமறிய ஆவல். 'சிகரம்' இணையத்தளம் உதயமாகிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் 'சிகரம்' இணையத்தளம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. வடிவமைப்புப் பணிகள் கடந்த மாதம் (தை 2048) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துர்முகி வருடம் திருவள்ளுவராண்டு 2048 மாசி மாதம் நான்காம் நாள் (2017.02.16) அன்று வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்து எனது கைகளுக்கு இணையத்தளம் ஒப்படைக்கப்படும். மாசி மாதம் ஏழாம் நாள் (2017.02.19) அன்று உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன். வடிவமைப்புப் பணிகளில் ஏதேனும் தாமதங்கள் நேர்ந்தாலோ அல்லது ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள நேர்ந்தாலோ மாசி மாதம் இருபத்தோராம் நாள் (2017.03.05) உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளம் சமர்ப்பிக்கப்படும். பதிவுகள் இடப்பட்டு முழுமையான பாவனைக்குரிய தளம் வைகாசி மாதம் பதினெட்டாம் நாள் (2017.06.01) அன்று உங்கள் எண்ணங்களுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கக் காத்திருக்கிறது. 'சிகரம்' வலைத்தளத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களாக நீங்கள் நல்க…