Saturday 26 May 2018

வாழ்தலின் பொருட்டு - 05

கருத்த இவ்விருளைக் குழைத்து பொட்டிட்டுக் கொண்டபின் இருவிழி மூடி அவ்விருளின் நிறம் அப்பிய கணத்தில் பறக்கத் துவங்கியது பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்!

நேற்று சமைத்த பாத்திரத்தில் மீந்த சோறாய் காய்ந்து ஒட்டிக் கொண்ட நினைவுகளை அகற்ற தோதாய் ஊற வைக்கிறேன் உள்ளத்தை !

ஆவியில் அவித்த இட்லியாய் விண்டு விழுங்கிவைத்தும் நினைவைச் செரிக்கும் அகத்தினை பெற்றதும் வரமேதான்!

அணைந்த தீபத்தின் கருகல்வாடையாய் அடைகாத்த அன்பு விழித்திரை தாண்டி படர்கிறது துளிகளாய்!

எங்கோ எப்போதோ சிரித்து வைத்த, சிநேகித்த சில நொடிகள் குமிழிகளாய் உள்ளக்கிடங்கில் வெடித்துச் சிதறுகையில் கருநிற இருளில் மினுமினுக்கிறது நம்பிக்கை நட்சத்திரங்கள்...!

உன்னைப் போர்த்திக் கொண்டு உறங்குதலே மீயின்பம் ஆதலால் உன்னோடு சூடுபறக்கும் ஒரு கோப்பை தேநீரைப் பகிர்ந்து பசியாற்றிக் கொள்ள என்னோடே இருந்துவிடமாட்டாயா மையிருளே? !



உடைந்த வளையல் துண்டாய் உறுத்தி ரணமாக்குகிறது வலி உள்ளத்தை! சேர்த்து வைத்த அத்தனையும் செலவழித்துத் தீர்ந்ததுபோல் திக்கற்றுத் திணறுகையில்தான் அகோரப்பசியென்று பிசைந்து நிற்கிறது பிரியம் தேடி மனது !

கடைவாய்ப்பல் வலிக்கையில் அருந்தும் வெந்நீர்போல வெதுவெதுப்பை விதைக்கும் விழிகளின் பார்வையில் தான் இருக்கிறது வாழ்தலுக்கான நம்பிக்கை ! 

காற்றடித்த திசையெல்லாம் அசைந்து ஆடினாலும் கிளைகளுக்கும் இலைகளுக்குமான பிரியத்துக்கு உயிர் நீர் வார்ப்பதென்னவோ உண்மையில் மண்மூடிய வேர்கள் தான்!

மொய்த்து அரிக்கும் ஈயாய் இடைவிடாது மண்டை ஓட்டுக்குள் நச்சரிக்கும் நினைவைப் புறந்தள்ளி மீண்டும் துளிர்க்க ஒரு கோப்பை தேநீரோடு ஊடுருவி உயிர்பருகி கொள்(ல்) என்விழிகளே !
 

#095/2018/SIGARAMCO
2018/05/26
வாழ்தலின் பொருட்டு - 05

https://www.sigaram.co/preview.php?n_id=321&code=90Rxe1s2
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி) 
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE 
#சிகரம்

No comments:

Post a Comment

Popular Posts